திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கலெக்டர் அலுவலக ரவுண்டானா
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ரவுண்டானா திண்டுக்கல்-சேலம், திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இதில் திருச்சியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் பக்கவாட்டிலும், மதுரையில் இருந்து திருச்சி, சென்னை, பெங்களூருவுக்கு செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாகவும் செல்கின்றன.
இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வரும் வாகனங்கள் இணைப்பு சாலை வழியாக மேம்பாலத்தின் பக்கவாட்டிலும் திண்டுக்கல் நகருக்குள் வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர். அதோடு 3 பக்கங்களில் இருந்து வரும் வாகனங்களும் ஒரே நேரத்தில் கடக்க முயல்வதால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து விடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
அணிவகுத்த வாகனங்கள்
இந்த நிலையில் நேற்று மதியம் அந்த ரவுண்டானா பகுதியில் 3 திசைகளில் இருந்தும் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்தன. அதிலும் கார்கள் அதிக அளவில் வந்தன. அதோடு பஸ்கள், லாரிகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் முந்தி செல்ல முயன்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி சாலை, மதுரை சாலை, திண்டுக்கல் சாலை ஆகியவற்றில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். அதன்பின்னர் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி வாகனத்தை இயக்கி சென்றனர்.
மேலும் திருச்சியில் இருந்து மதுரைக்கு செல்லும் வாகனங்களுக்கு வசதியாக மேம்பாலத்தை திருச்சி சாலை வரை நீட்டிக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதன்மூலம் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story