சரக்கு லாரி தீப்பற்றி எரிந்தது; 5 பேர் உடல் கருகினர்


சரக்கு லாரி தீப்பற்றி எரிந்தது; 5 பேர் உடல் கருகினர்
x
தினத்தந்தி 8 Sep 2021 8:40 PM GMT (Updated: 8 Sep 2021 8:40 PM GMT)

சரக்கு லாரி தீப்பற்றி எரிந்ததில் 5 பேர் உடல் கருகினர்.

ஜெயங்கொண்டம்:

சரக்கு லாரி
திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்ட பகுதிகளுக்கு தினமும் ஒரு தனியார் பார்சல் நிறுவன லாரி இயக்கப்பட்டு வந்தது. வழக்கம்போல் அந்த லாரி நேற்று முன்தினம் இரவு மளிகை, ஜவுளி, மருந்து பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பட்டாசு போன்ற வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், உடையார்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் பார்சல்களை இறக்குவதற்காக வந்தது. அந்த லாரியை பார்சல் நிறுவன டிரைவர் திருச்சி கீரைக்கார தெருவை சேர்ந்த மருதை மகன் சபரி(வயது 26) ஓட்டினார்.
ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கான பொருட்களை இறக்கிவிட்டு வந்தபோது, லாரியின் டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து பஞ்சர் பார்க்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆண்டிமடம் பகுதியில் உள்ள கடைகளுக்கு காலையில் சென்று பொருட்களை இறக்குவதற்காக, இரவில் ஜெயங்கொண்டத்திலேயே தங்குவதற்கு டிரைவரும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் முடிவு செய்துள்ளனர்.
தீப்பற்றி எரிந்தது
இதையடுத்து ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் அவர்கள் சாப்பிட்டுவிட்டு, இரவு 10 மணி அளவில் அதே பகுதியில் பெருமாள் கோவில் ஓரமாக கார் நிறுத்தத்தில் லாரியை நிறுத்தினர். இதையடுத்து லாரியில் டிரைவர் சபரி மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களான அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமம் காலனித்தெருவை சேர்ந்த கருப்பையா மகன் இளங்கோவன்(19), மருதமுத்து மகன் விஜயகுமார்(21), பழனிச்சாமி மகன் பகவதி(18), தங்கமணி மகன் மணிகண்டன் (18) ஆகிய 5 பேரும் லாரியிலேயே படுத்து தூங்கினர்.
அதிகாலை 2.30 மணி அளவில் லாரியில் திடீரென்று பயங்கர வெடிசத்தத்துடன் தீப்பற்றி, மளமளவென பரவியது. இதனால் லாரியில் தூங்கியவர்கள் தீயில் சிக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் அங்கு ஓடிவந்தனர். 
5 பேருக்கு சிகிச்சை
அப்போது லாரியில் தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்டு 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் லாரியில் இருந்த 5 பேரும், அதில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையிலான ேபாலீசார் அங்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.
இதற்கிடையே தீயில் உடல் கருகிய 5 பேரையும், போலீசார் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் டிரைவர் சபரி மற்றும் விஜயகுமார், பகவதி, இளங்கோவன் ஆகிய நான்கு பேருக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால், அவர்கள் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மணிகண்டனுக்கு லேசான காயமே ஏற்பட்டிருந்ததால், அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொருட்கள் நாசம்
மேலும் லாரி எப்படி திடீரென தீப்பற்றி எரிந்தது என்பது குறித்தும், தீப்பற்றியதற்கு அதில் இருந்த வெடிபொருட்கள்தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கொசுவர்த்தியை கொளுத்தி லாரியில் வைத்திருந்ததாகவும், அதில் இருந்து எதிர்பாராதவிதமாக தீப்பொறி ஏற்பட்டு பரவி தீப்பற்றி இருக்கலாம் என்றும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நின்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story