அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்,
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா
இதுகுறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக கீழ்க்கண்ட இயக்க நடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமய விழாக்களை முன்னிட்டு மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவதற்கோ அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே விழாவை கொண்டாடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தனி நபர்
தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று சிலைகளை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அனுமதி தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும் அமைப்புக்கள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.
தனிநபர்கள் தங்கள் இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை கோவில்களில் வெளிப்புறத்திலும், சுற்றுப்புறத்திலும் வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சிலைகளை பின்னர் முறையாக எடுத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறையினரால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நடவடிக்கை
தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளி கடைபிடித்தால் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேல் குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை எவ்வகையிலும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விழாவிற்கான பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும், சந்தைகளுக்கு செல்லும் மக்கள் தவறாது முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட நடைமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story