4 மாதங்களுக்கு பிறகு உதயகிரிகோட்டை பூங்கா திறப்பு
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட உதயகிரிகோட்டை பல்லுயிர் பூங்கா 4 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.
பத்மநாபபுரம்:
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட உதயகிரிகோட்டை பல்லுயிர் பூங்கா 4 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.
உதயகிரிகோட்டை
தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சியில் உதயகிரிகோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை வேணாடு அரசரால் கி.பி.1595-ம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டு 1607-ம் ஆண்டு நிறைவடைந்தது. பின்னர், மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் 1729-ல் தொடங்கி 1758-ம் ஆண்டு கற்கோட்டையாக மாற்றியமைக்கப்பட்டது. அப்போது, இந்த கோட்டை போர் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையாகவும், சேமிப்பு கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டது.
தமிழக அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்த பின் இந்த கோட்டை, பல்லுயிர் பூங்காவாக மாற்றப்பட்டது. பூங்காவில் மான், மயில், மீன் அருங்காட்சியகம், பறவைகளுக்கான குடில்கள் உள்ளன. மேலும், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் என பல உள்ளதால் குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் தவறாமல் குழந்தைகளுடன் பல்லுயிர் பூங்காவிற்கு வந்து செல்வார்கள்.
திறக்கப்பட்டது
கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. தற்போது, தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதை தொடர்ந்து 4 மாதங்களுக்கு பின் நேற்று முதல் உதயகிரிகோட்டை பல்லுயிர் பூங்கா திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையொட்டி உதயகிரிகோட்டை பல்லுயிர் பூங்கா வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் முககவசம் அணிந்து வருகிறார்களா என கண்காணித்தனர். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின், அவர்களின் முகவரி விவரங்களை பெற்று அனுமதிக்கப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் உற்சாகம்
4 மாதங்களுக்கு பிறகு உதயகிரிகோட்டை பூங்கா திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வந்து பார்த்து ரசித்து விட்டு சென்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story