இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது


இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 9 Sept 2021 3:00 AM IST (Updated: 9 Sept 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்கள். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்கள். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இரட்டை கொலை

பெங்களூரு புறநகர் சம்பிகேநகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது நண்பர் சந்தன். சமீபத்தில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு நீலகிரி தோட்டத்தில் ரவிக்குமாரும், சந்தனும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள். இதுகுறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை தேடிவந்தனர்.

போலீஸ் விசாரணையில், ரவிக்குமார் மற்றும் சந்தனை கொலை செய்தது முகமது அப்துல் கலீம் (வயது 22) மற்றும் தாருல் அலீம் (23) என்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். அவர்களை கைது செய்ய ஹெப்பகோடி போலீசார் தீவிரம் காட்டி வந்தார்கள்.

குடிபோதையில் தகராறு

இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த முகமது அப்துல் கலீம், தாருல் அலீம் ஆகிய 2 பேரையும் ஹெப்பகோடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரின் சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும்.

 தொட்டநாகமங்களாவில் தங்கி இருந்து முகமது அப்துல் கலீம் வெல்டிங் தொழிலாளியாகவும், தாருல் அலீம் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகவும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு, ரவிக்குமார் மற்றும் சந்தன் பழக்கமாகி உள்ளனர். இதனால் 4 பேரும் நண்பர்களாக பழகி வந்து உள்ளனர். 

அவர்கள் 4 பேரும் சேர்ந்து அடிக்கடி மதுஅருந்தி வந்துள்ளனர். இதற்கிடையில், தாருல் அலீம் மதுவிருந்து கொடுப்பதாக கூறி மற்ற 3 பேரையும் நீலகிரி தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து குடிபோதையில் சாதாரண பிரச்சினைக்கு ரவிக்குமார், சந்தன் ஆகிய 2 பேருடன் தாருல் அலீம் தகராறு செய்துள்ளார். அப்போது 2 பேரையும் முகமது அப்துல் கலீம், தாருல் அலீம் ஆகியோர் உருட்டு கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. கைதான 2 பேர் மீதும் ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story