கன்னட நடிகை அனுஸ்ரீ, போதைப்பொருள் பயன்படுத்தினார்
கன்னட நடிகை அனுஸ்ரீ போதைப்பொருட்களை பயன்படுத்தினார் என்று போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.
மங்களூரு: கன்னட நடிகை அனுஸ்ரீ போதைப்பொருட்களை பயன்படுத்தினார் என்று போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.
நடன இயக்குனர் கைது
மங்களூருவை சேர்ந்தவர் கிஷோர் அமன் ஷெட்டி. இவர் கன்னட திரையுலகில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கிஷோர் அமன் ஷெட்டியும், அவரது நண்பரும், நடன இயக்குனருமான தருண் ராஜ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி மங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கன்னட நடிகையும், டி.வி.நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியுமான அனுஸ்ரீயும் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இதனால் அனுஸ்ரீக்கு விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். அதன்பேரில் அனுஸ்ரீயும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். மேலும் தான் போதைப்பொருட்களை பயன்படுத்தவில்லை என்றும் கூறி இருந்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இதற்கிடையே போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கைதான கிஷோர் அமன் ஷெட்டி, தருண் ராஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்து இருந்தனர். இந்த நிலையில் மங்களூரு கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். அதில் கிஷோர் அமன் ஷெட்டி, தருண் ராஜ் ஆகியோர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் கிஷோர் அமன் ஷெட்டி, தருண் ராஜிடம் நடத்திய விசாரணையின் போது கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நடிகை அனுஸ்ரீ தங்களுடன் ஒரே அறையில் தங்கி இருந்ததாகவும், அப்போது அவர் போதைப்பொருட்களை பயன்படுத்தினார் என்றும், அவருக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களுடன் தொடர்பு உள்ளது என்றும், அவர் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் என்றும் கிஷோர் அமன் ஷெட்டியும், தருண் ராஜும் கூறியதாகவும் போலீசார் குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளனர்.
இதன்மூலம் நடிகை அனுஸ்ரீக்கு சிக்கல் எழுந்து உள்ளது. பெங்களூருவில் வசித்து வரும் நடிகை அனுஸ்ரீ, சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பைக்கு சென்று உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story