12-ந்தேதி மெகா சிறப்பு முகாம்: ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு கலெக்டர் விஷ்ணு தகவல்
ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி மெகா சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
சிறப்பு வாகனம்
நெல்லை மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களை வீடு தேடி சென்று அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கான சிறப்பு வாகனத்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில், மாவட்ட நீர் வளம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து அகத்தியமலை மக்கள் சாரா இயற்கை வள காப்பு மையம், நேரு யுவகேந்திரா, நெல்லை இயற்கை சங்கம் இணைந்து மேற்கொள்ளப்பட்ட மரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, மரங்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவர்களை தாலுகா வாரியாக வீடு வீடாக தேடி சென்று கண்டறிந்து தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு சிறப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மருத்துவர், 2 செவிலியர்கள், ஒரு தன்னார்வலர், தொழுநோயாளிகள் மருத்துவமனையில் பணியாற்றும் உதவியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முகாம்
தமிழக அரசு உத்தரவுப்படி வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் 800 இடங்களில் நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கும் பணி
மரங்களை பாதுகாப்பது தொடர்பாக கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக நெல்லையில் தான் இந்த பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. முதலில் 157 கோவில்களின் நந்தவனத்தில் உள்ள மரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இந்த பணிகளை 20 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிக்காக ஒரு பசுமை குழு மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 1037 நீர் நிலைகள் உள்ளன. இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆறு பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி நதிப்பகுதியை சீரமைக்க முதல்கட்டமாக 57 தடங்கள் கண்டறியப்பட்டு அவை அமைக்கப்படுகிறது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார், அறிவியல் மைய கல்வி அதிகாரி லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story