நெல்லை அருகே வாலிபர் இறந்த துக்கத்தில் கள்ளக்காதலி தீக்குளித்து தற்கொலை


நெல்லை அருகே வாலிபர் இறந்த துக்கத்தில் கள்ளக்காதலி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 Sept 2021 3:48 AM IST (Updated: 9 Sept 2021 3:48 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலி தீக்குளித்து தற்கொலை

சேரன்மாதேவி:
நெல்லை அருகே வாலிபர் இறந்த துக்கத்தில் கள்ளக்காதலி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண்
நெல்லை அருகே உள்ள பத்தமடை காந்திநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சுந்தரி (வயது 28).
இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து 2-வதாக சரவணனை திருமணம் செய்துள்ளார். சரவணன் வெளியூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
தீக்குளித்து சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சுந்தரி திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் சுந்தரி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து உடனடியாக பத்தமடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பரபரப்பு தகவல் வெளியானது.
கள்ளக்காதல்
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (24). இவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் சுந்தரியும் பணியாற்றி வந்தார். அப்போது, அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த நாகலிங்கத்தின் குடும்பத்தினர் அவரை கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த நாகலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இந்த துக்கத்தில் இருந்து வந்த சுந்தரி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story