மரம் விழுந்து சுற்றுச்சுவர் இடிந்தது
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மரம் விழுந்து சுற்றுச்சுவர் இடிந்தது
ஊட்டி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மரம் விழுந்து சுற்றுச்சுவர் இடிந்தது.
விடிய விடிய மழை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டியது.
இதனால் பொன்னானி, சோலாடி, பாண்டியாறு, மாயாறு போன்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் குளிர் நிலவி வருகிறது.
சுற்றுச்சுவர் இடிந்தது
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பூங்காவில் ஒரு மரம் வேருடன் முறிந்து விழுந்தது. வேர்பகுதி சுற்றுச்சுவர் அருகே இருந்ததால் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது.
தொடர்ந்து நேற்று பூங்கா பணியாளர்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பூங்கா வளாகத்தில் அபாயகரமான சில மரங்களையும் வெட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் காட்டெருமைகள் உள்ளே வருவதை தடுக்க பூங்காவை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது இடிந்து விழுந்துள்ள சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
மழை அளவு
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு(மி.மீ.) விவரம் வருமாறு:- ஊட்டி-4.4, நடுவட்டம்-41, கிளன்மார்கன்-10, அவலாஞ்சி-45, அப்பர்பவானி-19, கூடலூர்-43, தேவாலா-59, செருமுள்ளி-41, பாடாந்தொரை-41, ஓவேலி-43, பந்தலூர்-92, சேரங்கோடு-54 என மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story