தடை உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும்; ஊத்துக்கோட்டை பா.ஜனதா கட்சியினர் திட்டவட்டம்


தடை உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும்; ஊத்துக்கோட்டை பா.ஜனதா கட்சியினர் திட்டவட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2021 1:51 PM IST (Updated: 9 Sept 2021 1:51 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் அரசு தடைஉத்தரவை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலம் நடத்தப்படும் என்று பா.ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு கூட்டம்
நாடு முழுவதும் வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவது உண்டு. கொரானோ தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது.இதுகுறித்து இந்து அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா தொற்று 3-ம் அலை தாக்கத்திலிருந்து இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசு விதித்த தடை
அதில் ஒரு அங்கமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொது இடங்களில் பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட அரசு விதித்துள்ள தடையை பொதுமக்களின் நலன் கருதி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.அதே போல் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகள் கரைப்பதற்கும் தடை விதித்துள்ளது. வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு எந்தவித தடையுமில்லை. சமூக இடைவெளி கடைப்பிடித்து வீடுகளில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களை நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி பேசினார்.அதற்கு பின்னர் பா.ஜ.க. நிர்வாகிகள் பேசும்போது, இந்து பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமானதாகும். இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயலாகும்.

தடை உத்தரவை மீறி...
தமிழக அரசின் தடை உத்தரவை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்போம். மேலும் ஊர்வலமாக சிலைகள் எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்போம். இவ்வாறு அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, செயலாளர் சுப்பிரமணி, தமிழ் வளர்ச்சி அணி துணைத்தலைவர்கள் பத்மநாபன் பாலாஜி, சரத், எல்லாபுரம் ஒன்றிய தலைவர் சுந்தரம், பூண்டி ஒன்றிய பொதுச் செயலாளர்கள் கேசவன், சங்கரன், துணைத் தலைவர் ராஜேஷ், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story