காட்பாடியில் தபால் நிலைய பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
தபால் நிலைய பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
வேலூர்
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமாபாய் (வயது 56). இவர் சாய்நாதபுரத்தில் உள்ள துணை தபால் நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ரமாபாய் காட்பாடி காந்திநகரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்றார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் 9.30 மணியளவில் திருமண மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல பஸ் ஏறுவதற்காக காந்திநகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென ரமாபாய் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். அதனை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து மர்மநபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றார்.
இதுகுறித்து ரமாபாய் விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு கண்காணிப்பு கேமராவில், காந்திநகர் சாலையோரம் மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்டப்படி நின்று கொண்டிருக்கும் மர்மநபர் திடீரென ரமாபாயின் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
மோட்டார் சைக்கிள் பதிவெண் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story