முதல் சாட்சி கிருஷ்ண தாபாவிடம் விசாரிக்க நேபாளம் செல்ல தனிப்படை திட்டம்


முதல் சாட்சி கிருஷ்ண தாபாவிடம் விசாரிக்க நேபாளம் செல்ல தனிப்படை திட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 4:54 PM GMT (Updated: 9 Sep 2021 4:55 PM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் சாட்சியான கிருஷ்ண தாபாவிடம் விசாரிக்க நேபாளம் செல்ல தனிப்படை திட்டமிட்டு உள்ளது.

ஊட்டி,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் சாட்சியான கிருஷ்ண தாபாவிடம் விசாரிக்க நேபாளம் செல்ல தனிப்படை திட்டமிட்டு உள்ளது. 

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே வழக்கு தொடர்பாக சயான், ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். 

மேலும் வழக்கில் முழு விசாரணை நடத்த போலீசாருக்கு 4 வார கால அவகாசம் வழங்கி ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் வழக்கை முழுமையாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

முதல் சாட்சி

அதன்படி கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்பட சிலரிடம் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரடி விசாரணை நடத்தினார். மேலும் சாட்சிகள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, தனிப்படை போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

கோடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் சம்பவத்தை நேரில் பார்த்ததால், முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

விசாரிக்க திட்டம்

கிருஷ்ண தாபா, தற்போது நேபாளத்தில் வசித்து வருகிறார். அவரிடம், விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் தனிப்படை போலீசார், நேபாளத்துக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குன்னூர் கிளை சிறையில் உள்ள மனோஜிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 103 பேர் உள்ளனர். அவர்களில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என போலீசார் எதிர்பார்க்கும் நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் எதிர்பார்த்த தகவல்களும் கிடைப்பதால், விசாரணை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

மனோஜூக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல்

கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான் உள்பட 9 பேர் ஜாமீனில் இருக்கின்றனர். மனோஜூக்கு கடந்த 16.07.2021 அன்று ஊட்டி கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதற்கு 2 நபர்கள் பிணை கடிதம் தர வேண்டும். மேலும் அவர்கள் கோவை அல்லது நீலகிரி மாவட்டத்தில் குடியிருக்க வேண்டும். ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கான ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஆனால் மனோஜ் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பிணை கடிதம் தர நபர்கள் இல்லை. இதனால் அவர் குன்னூர் சிறையில் உள்ளார். இந்த நிலையில் நேற்று மனோஜூக்கு ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளை தளர்த்தக்கோரி அவரது வக்கீல், ஊட்டி கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது.



Next Story