ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி


ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 9 Sept 2021 10:28 PM IST (Updated: 9 Sept 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

விளைச்சல் அதிகரித்ததால் ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

விளைச்சல் அதிகரித்ததால் ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பூண்டு சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு ஊட்டி பூண்டுக்கு என தனி மவுசு உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.170 வரை விலை கிடைத்து வந்தது. இதனால் விவசாயிகள் பூண்டு அதிகமாக பயிரிட்டனர். தற்போது ஊட்டி ஆடாசோலை உள்பட பல்வேறு இடங்களில் பூண்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

விளைச்சல் அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக அறுவடை செய்த பூண்டுகளை நன்றாக காய வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் விளைநிலங்கள் சேறும், சகதியுமாக இருப்பதால் அறுவடை செய்வதில் சிக்கல் இருக்கிறது. மேலும் விவசாயிகள் விளைநிலங்களில் பூண்டு பயிர்களை பிடுங்கி தார்பாய் கொண்டு பாதுகாத்து வருகின்றனர்.

அவ்வப்போது மழை இல்லாததால் தரையில் தார்பாய் விரித்து பூண்டுகளை உலர வைத்து வருகின்றனர்.
இருப்பினும் தற்போது பூண்டு விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் அதன் விலை குறைந்து இருக்கிறது. வழக்கத்தைவிட மழைகாலத்தில் பூண்டு வரத்து அதிகமாக உள்ளது. 

விலை வீழ்ச்சி

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு பூண்டு விற்பனைக்கு வருவதால் உள்ளூரில் விளைவிக்கப்படும் பூண்டுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ பூண்டு ரூ.90 முதல் ரூ.110 வரை மட்டுமே விலை கிடைக்கிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஒரு கிலோ கேரட் ரூ.40 முதல் ரூ.50 வரை, உருளைக்கிழங்கு ரூ.30 முதல் ரூ.35 வரை, பீன்ஸ் ரூ.30 முதல் ரூ.40 வரை, பீட்ரூட் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தொடர் மழையால் சில இடங்களில் பூண்டுகள் அழுகின. இதனால் பூண்டுகளை விதைக்கு எடுத்து வைப்பது பாதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story