கள்ளக்குறிச்சியில் பரபரப்பு தடையை மீறி விநாயகர் சிலை வைக்க அமைக்கப்பட்டிருந்த பந்தல் அகற்றம் பதற்றம்; போலீஸ் குவிப்பு


கள்ளக்குறிச்சியில் பரபரப்பு தடையை மீறி விநாயகர் சிலை வைக்க அமைக்கப்பட்டிருந்த பந்தல் அகற்றம் பதற்றம்; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2021 5:30 PM GMT (Updated: 2021-09-09T23:00:33+05:30)

கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலை வைக்க அமைக்கப்பட்ட பந்தல் அகற்றப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி, 

பந்தல் அமைப்பு 

நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், கூட்டமாக ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்ததோடு, ஏராளமான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சுமங்கலி நகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்காக தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று மாலை பந்தல் அமைத்தனர். 

வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பந்தல் அமைத்த இளைஞர்களிடம் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. எனவே இங்கு அமைக்கப்பட்ட பந்தலை உடனடியாக அகற்றுமாறு கூறினர். அதற்கு இளைஞர்கள் அகற்ற முடியாது என்றனர். இதனால் இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடையை மீறி அமைக்கப்பட்ட பந்தலை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். அப்போது அப்பகுதி இளைஞர்கள் அங்கு திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story