பண்ருட்டி அருகே பெண்ணிடம் ரூ.4 கோடி வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
பண்ருட்டி அருகே பெண்ணிடம் ரூ.4 கோடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர்,
நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி மகன் சீனிவாசன் (வயது 33). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ள இவர் தனது தந்தை கருணாமூர்த்தியுடன் நெல்லிக்குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சீனிவாசனுக்கும், வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகள் கெஜலட்சுமி என்பவருக்கும் கடந்த 9.7.2014 அன்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளான்.
சீர்வரிசை பொருட்கள்
கெஜலட்சுமிக்கு லேசாக காது கேட்காது என்றும், சரியாக பேசமுடியாது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றி அறிந்து தான் சீனிவாசன், கெஜலட்சுமியை திருமணம் செய்து கொண்டதாக தொிகிறது.
திருமணத்தின் போது சீனிவாசனின் பெற்றோர் 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பாத்திரங்கள் மற்றும் கார் வாங்க ரூ.5 லட்சம் வரதட்சணையாக தர வேண்டும் என்று கேட்டிருந்தனர்.
இதில் 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் சீர்வரிசை பொருட்களை கெஜலட்சுமியின் பெற்றோர் திருமணத்தின்போது கொடுத்தனர். மீதி ரூ.20 லட்சத்தை பின்னர் தருவதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
தனி அறையில் அடைத்து கொடுமை
திருமணமான 6 மாதத்திலேயே கெஜலட்சுமியிடம் வரதட்சணையாக தரவேண்டிய ரூ.20 லட்சம் மற்றும் அவரது தாய் பெயரில் உள்ள ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் ஆகியவற்றை சீனிவாசன், இவரது தாய் லட்சுமி, சகோதரிகள் சியாமளா, விமலா, புவனா மற்றும் சியாமளாவின் கணவர் காசிலிங்கம் ஆகியோர் கேட்டு வந்தனர்.
மேலும் கெஜலட்சுமியை தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதுடன், அவருடைய குறையையும் அவர்கள் சுட்டிக்காட்டி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
6 பேர் மீது வழக்கு
மேலும் சீனிவாசனுக்கு 2-வது திருமணம் செய்து வைக்க விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டும் கொடுமைப்படுத்தினர். பின்னர் அவர்கள் கெஜலட்சுமியை வீட்டில் இருந்து துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கெஜலட்சுமி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சீனிவாசன், மாமியார் லட்சுமி உள்பட 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story