கடந்த 3 ஆண்டுகளில் தொலைந்து போன ரூ.60 லட்சத்தில் 301 செல்போன்கள் மீட்பு-உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்


கடந்த 3 ஆண்டுகளில் தொலைந்து போன ரூ.60 லட்சத்தில் 301 செல்போன்கள் மீட்பு-உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்
x
தினத்தந்தி 9 Sep 2021 7:03 PM GMT (Updated: 9 Sep 2021 7:03 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தொலைந்து போன ரூ.60 லட்சம் மதிப்பிலான 301 செல்போன்கள் மீட்கப்பட்டது. இவற்றை உரிய நபர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் ஒப்படைத்தார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தொலைந்து போன ரூ.60 லட்சம் மதிப்பிலான 301 செல்போன்கள் மீட்கப்பட்டது. இவற்றை உரிய நபர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் ஒப்படைத்தார்.
301 செல்போன்கள் மீட்பு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து தரக்கோரி 585 பேர் நாமக்கல் மாவட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்து உள்ளனர். இதை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் இதுவரை 301 செல்போன்களை மீட்டு உள்ளனர். அவற்றை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. மீட்கப்பட்ட செல்போன்களை பார்வையிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நபர்களிடம் வழங்கினார்.
ரூ.60 லட்சம் மதிப்பில்...
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டு காலத்தில் 585 செல்போன்கள் தொலைந்து இருப்பதாக புகார்கள் வரப்பெற்று உள்ளன. இவற்றில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான 301 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 284 செல்போன்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பணம் சம்பந்தமாக சைபர் குற்றங்கள் நடைபெறும்போது உடனடியாக தேசிய உதவி மைய எண்ணான 155260 என்ற எண்ணையும், குழந்தை திருமணம் சம்பந்தமான புகார்களுக்கு 1098 என்ற எண்ணையும், பெண்கள் சம்பந்தமான புகார்களுக்கு 181 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ள வேண்டும். பணம் இரட்டிப்பு செய்து தருவதாக யாராவது கூறினால் ஏமாற கூடாது.
நோயினால் இறந்தார்
கொல்லிமலையில் காட்டு பகுதியில் இறந்து கிடந்த போலீஸ்காரர் ஆனந்தன், மூளையில் ஏற்பட்ட நோயால் இறந்து இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story