1.30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்


1.30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 8:00 PM GMT (Updated: 2021-09-10T01:30:23+05:30)

தஞ்சை மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி நடைபெறும் 1,324 சிறப்பு முகாமில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி நடைபெறும் 1,324 சிறப்பு முகாமில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சை மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் மாவட்டம் முழுவதும் 1,324 முகாம்களில் நடைபெறுகிறது. இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
தஞ்சை ரெயிலடியில் இருந்து ஊர்வலம் தொடங்கி பழைய பஸ் நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் பேட்டி
ஊர்வலம் முடிவில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முன்னதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 98 ஆயிரத்து 187 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வருகிற 12-ந்தேதி நடைபெறும் சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாம்கள் ஊரக மற்றும் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அங்கன்வாடிகள், பள்ளிகள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஒரு முகாமிற்கு 4 பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் பேர் பணியாற்ற உள்ளனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக தஞ்சை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டவர்களுடன் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவி வைஜெயந்திமாலாகேசவன், துணைத்தலைவர் அருளானந்தசாமி, வட்டார வளர்ச்சி அதிகாரி பிரபாகரன் மற்றும் அதிகாரிகள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story