1,008 பொறிவண்டுகள் வடிவத்தில் விநாயகர் சிலை
1,008 பொறிவண்டுகள் வடிவத்தில் விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு வடிவங்களிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதியில் திருச்சி -சிதம்பரம் சாலையில் வசித்து இல்லத்தரசியான பிரியா ராஜா, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது வித்தியாசமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து வழிபடுவது வழக்கம். கடந்த 2008-ம் ஆண்டில் கொட்டைப்பாக்கு விநாயகரில் தொடங்கி, நவதானியம், பென்சில் துகள்கள், மாத்திரை, சங்குப்பூ, மக்காச்சோளம் போன்றவற்றால் விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளார். அதன்படி இந்த ஆண்டு விவசாயத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொறி வண்டு விநாயகர் செய்ய முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக தனது குழந்தைகள் உதவியுடன் களிமண்ணை திரட்டி, அதில் 1,008 பொறி வண்டுகளின் உருவத்தை களிமண்ணால் செய்து, வர்ணம் தீட்டி, சிலையில் பதித்து, சுமார் 5 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையை தயார் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மண்புழுவை போன்று பொறி வண்டும் விவசாய தோழன்தான். விவசாய நிலங்களில் உள்ள பயிர்களின் இலைகளை தின்று மகசூல் இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளை இந்த பொறி வண்டு தின்றுவிடும். ஆனால் இந்த வண்டு இலைகளை திண்பதில்லை. இப்படி விவசாயத்திற்கும், விவசாயிக்கும் உறுதுணையாக இருக்கும் இந்த பொறிவண்டை நாம் பாதுகாத்து இயற்கை விவசாயத்தை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஆண்டு பொறி வண்டு உருவம் படைத்த விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளதாகவும், ஒவ்வொரு பொறிவண்டுக்குள்ளும் ஒரு வேப்பமர விதை வைத்து செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தற்போது பரவி வரும் கொரோனா வைரசை விநாயகர் பெருமான் அழித்து, பொதுமக்களை காத்தருள வேண்டும் என்பதே தன்னுடைய வேண்டுதல் என்று அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story