என் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டு பொய்யானது; நடிகை அனுஸ்ரீ பேட்டி


என் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டு பொய்யானது; நடிகை அனுஸ்ரீ பேட்டி
x
தினத்தந்தி 9 Sep 2021 8:33 PM GMT (Updated: 2021-09-10T02:03:16+05:30)

என் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டு பொய்யானது என்று நடிகை அனுஸ்ரீ கூறியுள்ளார்.

பெங்களூரு: என் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டு பொய்யானது என்று நடிகை அனுஸ்ரீ கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் வரும்

மங்களூரு போலீசார், நடிகை அனுஸ்ரீ போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா். அதுகுறித்து நடிகை அனுஸ்ரீ பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து உள்ளேன். நான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர். அது பொய்யானது. என் மீது பல குற்றச்சாட்டுகள் வரும். ஆனால் அது உண்மை அல்ல. நான் சொத்துகளை வாங்கி குவித்ததாக சிலர் கூறியுள்ளனர்.

வாக்குமூலம் அளிப்பேன்

மங்களூருவில் ஒரு சிறிய வீடு உள்ளது. அதற்கும் வங்கி கடன் உள்ளது. அது நான் உழைத்து சம்பாதித்த சொத்து. பெங்களூருவில் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன். இதை தவிர எனக்கு வேறு எங்கும் சொத்துகள் இல்லை. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் பதிலளிக்க முடியாது. போலீசார் அழைத்தால் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பேன். நான் மக்களின் அன்பை சம்பாதித்துள்ளேன். அதை தவிர எனக்கு வேறு எந்த பெரிய சொத்துகளும் இல்லை.

எனக்கு எந்த பிரபலமான தலைவரின் ஆதரவும் இல்லை. போலீசார் மீது எந்த அழுத்தமும் நான் கொடுக்கவில்லை. சொந்த வேலை காரணமாக நான் மும்பைக்கு சென்றேன். எனக்கு எந்த பயமும் இல்லை. நான் பெங்களூருவில் தான் இருப்பேன். பிரசாந்த் சம்பரகி என்பவர் யார் என்று எனக்கு தெரியாது. அவர் தான் எனக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வீடுகள் உள்ளதாக கூறியுள்ளார். அந்த சொத்துகள் எங்கு உள்ளது என்பதை அவர் தான் கூற வேண்டும்.
இவ்வாறு அனுஸ்ரீ கூறினார்.

Next Story