அரசு மருத்துவமனையில் பூட்டி கிடக்கும் எக்ஸ்ரே மையம்


அரசு மருத்துவமனையில் பூட்டி கிடக்கும் எக்ஸ்ரே மையம்
x
தினத்தந்தி 10 Sept 2021 2:13 AM IST (Updated: 10 Sept 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மையம் பூட்டி கிடப்பதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மையம் பூட்டி கிடப்பதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். 
அரசு மருத்துவமனை 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை உள்ளது. 
இந்த மருத்துவமனையில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி, நெடுங்குளம், கொடிக்குளம், சேது நாராயணபுரம், பட்டுப்பூச்சி, சுந்தரபாண்டியன் மகாராஜபுரம், தம்பிபட்டி, மேலக்கோபலபுரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 
நோயாளிகள் அவதி 
இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
எக்ஸ்ரே எடுப்பதற்கு பணியாளர்கள் இல்லை. ஆதலால் இந்த மையம் பூட்டி கிடக்கிறது. இங்கு வரும் நோயாளிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால் தனியார் எக்ஸ்ரே மையத்திற்கு சென்று எக்ஸ்ரே எடுக்கும் சூழ்நிலை உள்ளது. அதேபோல இந்த மருத்துவமனையில் போதுமான தூய்மை பணியாளர்கள் இல்லை. இரவு காவலாளி இல்லை. வத்திராயிருப்பு தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 2  ஆண்டுகளுக்கு மேலாகியும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களும், எக்ஸ்ரே எடுப்பதற்கு பணியாளர், இரவு நேர காவலர் மற்றும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக பணியில் அமர்த்தி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story