விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்


விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 9 Sep 2021 9:04 PM GMT (Updated: 9 Sep 2021 9:04 PM GMT)

ராஜபாளையம், சிவகாசியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம், 
ராஜபாளையம், சிவகாசியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
சதுர்த்தி விழா 
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, அதன் பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். 
 விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், வீடுகளில் வைத்து வழிபடும் வகையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிறிய அளவிலான களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வெளிமாநிலங்களிலிருந்து ராஜபாளையத்திற்கு வந்துள்ளன. 
விநாயகர் சிலைகள் 
அதேநேரத்தில் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கண்ணன் வடிவ விநாயகர், ராஜ கணபதி, வீர கணபதி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
அழகு நேர்த்தி கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகள் ரூ.200 முதல்  ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஜவகர் மைதானம், தென்காசி ரோடு, டி.பி. மில்ஸ் ரோடு, சத்திரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இ்ந்த சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். 
ஏமாற்றம்
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:- 
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் பெரிய சிலைகள் விற்பனை ஆகவில்லை. இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.  சிறிய சிலைகள் எங்களின் அன்றாட தேவைகளையே நிறைவு செய்யும். நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். 
இவ்வாறு அவர் கூறினார்.
அதே போல சிவகாசியிலும் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Next Story