மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து பூசாரி தற்கொலை


மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து  குதித்து பூசாரி தற்கொலை
x
தினத்தந்தி 9 Sep 2021 9:11 PM GMT (Updated: 2021-09-10T02:41:43+05:30)

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்து பூசாரி தற்கொலை செய்து கொண்டார். ஒரு வாரத்தில் அங்கு 2 பேர் உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவட்டார், 
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்து பூசாரி தற்கொலை செய்து கொண்டார். ஒரு வாரத்தில் அங்கு 2 பேர் உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாத்தூர் தொட்டிப்பாலம்
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் மாத்தூர் தொட்டிப்பாலம் முக்கியமான ஒன்றாகும். 104 அடி உயரமும் 1,240 அடி நீளமும் கொண்ட இந்த தொட்டிப்பாலத்தை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குலசேகரம் பகுதியை சேர்ந்த ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெஞ்சை பதை பதைக்க வைத்த இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் மீண்டும் இதேபோல் ஒரு தற்கொலை நடந்துள்ளது. அதாவது, நேற்று காலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நடந்து சென்றபடி ரம்மியமான காட்சியை ரசித்து கொண்டிருந்தனர்.
கீழே குதித்து தற்கொலை
அப்போது, முதியவர் ஒருவர் திடீரென தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் அலறி துடித்தனர். ஆனால் கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 
சுற்றுலா பயணிகளுக்கு மத்தியில் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவம், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றினர். அவர் யாரென்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
பூசாரி
அதே சமயத்தில், அவர் காவி நிற வேட்டி அணிந்திருந்தார். மேலும், அவருடைய சட்டையில் மஞ்சள் பை ஒன்று இருந்தது. அதில், பூதப்பாண்டி அழகிய சோழவ நங்கை அம்மன் கோவில் அருள் பிரசாதம் என அச்சிடப்பட்டிருந்தது.
இதனால் தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என நினைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், தற்கொலை செய்தவர் பூதப்பாண்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சங்கர நாராயணன் (வயது 61) என்பது தெரிய வந்தது. அவர் கொய்யன்விளை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். அவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
இந்தநிலையில் சில நாட்களாக அவர் கோவிலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. அதே சமயத்தில் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையிலும் இருந்துள்ளார். இந்தநிலையில் தான் அவர் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.
2-வது சம்பவம்
இதற்கிடையே போலீசார், தற்கொலை செய்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் 2 பேர், மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story