சந்தை கடை வீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


சந்தை கடை வீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 Sep 2021 10:32 PM GMT (Updated: 9 Sep 2021 10:32 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தை மற்றும் கடை வீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் நேற்று குவிந்தனர்.

திருப்பூர்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தை மற்றும் கடை வீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் நேற்று குவிந்தனர். 
விநாயகர் சதுர்த்தி விழா 
நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதுபோல் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வழிபாடு நடத்துவார்கள். இதன் பின்னர் இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். 
இதற்கிடையே கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பொதுமக்கள் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
சந்தையில் குவிந்தனர் 
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள சந்தையில் பூக்கள் வாங்க பொதுமக்கள் பலர் குவிந்தனர். இதனால் பூக்கள் விற்பனை நேற்று அதிகமாக இருந்தது. இதுபோல் அலங்கார பொருட்களின் விற்பனையும் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியையொட்டி எருக்கம்பூ போன்றவற்றையும் பலரும் விற்பனை செய்தனர். இதனையும் பொதுமக்கள் பலர் வாங்கி சென்றனர். 
இதுபோல் மாநகரில் உள்ள பல பழக்கடைகளில் பழங்கள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. மேலும், புதுமார்க்கெட் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட முக்கியமான பல வீதிகளில் பலரும் பூஜை பொருட்கள் மற்றும் மாலைகள் என பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி சென்றனர்.
சிலைகள் வாங்க ஆர்வம் 
இதுபோல் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்காக விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நேற்று ஆர்வமாக வாங்கினர். திருப்பூர் பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் சாலையோரம் வியாபாரிகள் பலரும் விநாயகர் சிலைகளை விற்பனைக்காக வைத்திருந்தனர். 
ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான விநாயகர் சிலைகளை வீடுகளுக்கு வாங்கி சென்றனர். தர்மபுரி, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த சிலைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. விதை விநாயகர் சிலைகள் உள்பட பல்வேறு வடிவங்களில் இந்த சிலைகள் கண்களை கவரும் வகையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. மாலை நேரங்களில் பலரும் பொருட்கள் வாங்க குவிந்ததால் மாநகரில் குமரன் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 
பூக்கள்-பழங்கள் விலை விவரம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்ததாலும், பூக்களின் விலை நேற்று குறைவாக தான் இருந்தது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.800-க்கும், ஜாதி மல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், பிச்சி ரூ.500-க்கும், அரளி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.350-க்கும், முல்லை ரூ.800-க்கும், ரோஜா ரூ.280-க்கும், தாழம்பூ ரூ.150-க்கும், தாமரை ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இதுபோல் பழங்களின் விலையும் உயரவில்லை. அதன்படி ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150-க்கும், ஆரஞ்சு ரூ.60-க்கும், சாத்துக்குடி ரூ.50-க்கும், மாதுளை ரூ.160-க்கும், திராட்சை ரூ.140-க்கும், சீதாப்பழம் ரூ.50-க்கும் என விற்பனை செய்யப்பட்டது. பழங்களின் தரத்திற்கு ஏற்ப பல இடங்களில் விலைகளில் மாற்றங்களும் இருந்தன. 
மேலும், கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பணிகளும் நடந்தன. பூஜைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

Next Story