போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடும் பல்லடம்


போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடும் பல்லடம்
x
தினத்தந்தி 9 Sep 2021 10:51 PM GMT (Updated: 2021-09-10T04:21:35+05:30)

பல்லடம் நகரம் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடுவதால் மாற்று வழிகளை ஏற்படுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம்
பல்லடம் நகரம் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடுவதால் மாற்று வழிகளை ஏற்படுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகரித்த போக்குவரத்து
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் நகரம் அமைந்துள்ளது. இந்தச் சாலையில் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றன. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டும். மேலும் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் முகூர்த்த நாள் என்றால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கிறது. அதன்படி நேற்று முகூர்த்த நாள் என்பதால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித்தவித்தன.
இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர் முதல் பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.
தீர்வு
போக்குவரத்து போலீசார் தடுப்புகள் வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினாலும் கூட ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப் போனது. இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
நெரிசலுக்கு தீர்வு காண சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே இதனை செயல்படுத்திட அரசு விரைவான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story