வீடுகளுக்கு முன் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பிரதிஷ்டை
திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளுக்கு முன் விநாயகர் சிலைகள் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பிரதிஷ்டை செய்துள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளுக்கு முன் விநாயகர் சிலைகள் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பிரதிஷ்டை செய்துள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சொந்த இடத்தில் விநாயகர் சிலை
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் விழா கொண்டாடுவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது. விசர்ஜன ஊர்வலத்துக்கும் அனுமதியில்லை. தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடலாம் என்று அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளித்துள்ளார். ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்க அனுமதியில்லை என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் அதிகாரிகளிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சொந்த இடங்களில் வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட ஏற்பாடு செய்துள்ளனர். இந்து முன்னணியினர், பா.ஜனதாவினர், சிவசேனா உள்ளிட்டவர்களும் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட முடிவு செய்துள்ளனர். சொந்த இடத்தில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளை செய்து விநாயகர் சிலைகளை நேற்று இரவு முதல் அமைத்துள்ளனர். கோவில் வளாகங்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய இருக்கிறார்கள். திருப்பூர் மாநகர பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட உள்ளன. அதுபோல் மாவட்டம் முழுவதும் அவரவர் சொந்த இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமையில் 850 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். அதுபோல் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா தலைமையில் மாநகர பகுதியில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை விநாயகர் சிலைகளை எடுத்து அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர். அதுபோல் வீடுகளில் வைக்கும் விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில் அருகில் வைக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையினர் மூலமாக அந்த சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story