ஜோலார்பேட்டை அருகே கிராம மக்கள் சாலை மறியல்


ஜோலார்பேட்டை அருகே கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Sept 2021 5:07 PM IST (Updated: 10 Sept 2021 5:07 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் வினியோகிக்கக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் வினியோகிக்கக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்துப்பாதிப்பு ஏற்பட்டது.

திடீர் மறியல்

ஜோலார்பேட்டைைய அடுத்த பெரியகம்மியம்பட்டு அண்ணாநகர் பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர வராததால் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7.15 மணியளவில் காலிக்குடங்களுடன் ஜோலார்பேட்டை புத்துக்கோவில் செல்லும் சாலையில் ஒரு மணிநேரம் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார், ஊராட்சி செயலர் அருட்செல்வி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

வாக்கு வாதம்

அப்போது பொதுமக்கள், கடந்த 15 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வரவில்லை. நாங்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை மறியலில் ஈடுபட்டால் மட்டுமே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகிறீர்கள், எனக்கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

இருப்பினும், சமரசம் ஆகாத கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்துக்கு வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம், என்றனர்.

டேங்கர் மூலம் குடிநீர்

அதற்கு போலீசார், டிராக்டர் டேங்கர் மூலம் உங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும், விரைவில் ஆழ்துளை கிணறு சரிசெய்யபட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கபடும், எனக் கூறினர். 
இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை ைகவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Next Story