அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை


அருணாசலேஸ்வரர் கோவிலில்  சாமி தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை என 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை என 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தரிசனத்துக்கு தடை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி வெள்ளி, சனி மற்ற்றும் ஞாயிறுக்கிழமை ஆகிய 3 நாட்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டு வருகிறது. 
அதன்படி நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 இதனால் கோவிலின் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. 
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவுடன் கூடிய சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முகூர்த்த நாளையொட்டி அதிகாலை முதல் திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது. 

திருமண நிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் நேற்று காலை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சிக்கு வந்த வெளியூர் மக்கள் பலர் நேற்று முன்தினமே அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று வந்த மக்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 

மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் முன்பதிவு செய்து இருந்த திருமண நிகழ்ச்சிகள் மட்டும் கோவில் வளாகத்தில் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது மணமக்களின் குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மட்டும் சமூக இடைவெளியுடன் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மண்டபங்களில் திருமணம் செய்த மணமக்கள் கோவில் ராஜகோபுரம், 16 கால் மண்டபம் முன்பு நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

Next Story