தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடு்ப்பு விதிமுறைகளை மீறிவோருக்கு அபராதம் கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடு்ப்பு விதிமுறைகளை மீறிவோருக்கு அபராதம் கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Sep 2021 1:13 PM GMT (Updated: 10 Sep 2021 1:13 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கண்காணிப்பு குழுக்கள் மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கண்காணிப்பு குழுக்கள் மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழ்நாட்டில் கொரோனா முதல் மற்றும் 2-வது அலைகள் ஏற்பட்டு அரசின் தீவிர நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது பொது மக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட் போன்றவை முழு அளவில் செயல்பட்டு வருகிறது. 
இதனால் பொதுமக்கள் மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லரை வியாபார நிறுவனங்களில் அதிகமாக கூடுவதால் கொரோனா நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்துதல், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்களை கண்டறிதல், முன்களப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அபராதம்
மேலும் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் கொரோனா தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்துதலில் விதிமுறைகளை மீறினால் ரூ.500-ம், முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.200-ம், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.5000-ம், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் விதிமுறைகளை மீறும் தனி நபர்களுக்கு ரூ.500-ம், அதுபோல் நிறுவனங்களுக்கு ரூ.5000-ம் அபராதம் விதிக்கப்படும்.
கண்காணிப்பு குழுக்கள்
விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு குழுவினர் இதுதொடர்பான விபரத்தினை அறிக்கையாக மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அலுவலருக்கு உடனடியாக தெரிவிப்பார்கள். எனவே பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட அரசின் பல்வேறு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story