மாவட்ட செய்திகள்

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கைகள் + "||" + Extra beds at Ooty Government Hospital

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கைகள்

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கைகள்
ஊட்டியில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக டீன் மனோகரி தெரிவித்தார்.
ஊட்டி,

ஊட்டியில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக டீன் மனோகரி தெரிவித்தார்.

ஆக்சிஜன் வசதி

நீலகிரி மாவட்டத்தில் தினமும் கொரோனா பாதிப்பு 30 பேருக்கு மேல் உறுதியாகி வருகிறது. தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறையாமல் உள்ளது. பாதிப்பு குறைந்து வந்தாலும் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. 

இதனால் படுக்கைகள் காலியாகாமல் நிரம்பி வருகிறது.ஊட்டி அரசு மருத்துவமனையில் சாதாரண 35 படுக்கைகளில் 13 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 155 படுக்கைகளில் 125 படுக்கைகளும், ஐ.சி.யூ. வார்டில் 25 படுக்கைகளில் 12 படுக்கைகளும் நிரம்பி உள்ளது. மொத்தம் 215 படுக்கைகளில் 150 படுக்கைகள் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  

3-வது அலை

இதற்கிடையே அடுத்த மாதம் கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் உள்ளது. மேலும் நீலகிரியையொட்டி கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா 3-வது அலை மற்றும் நிபா வைரஸ் பரவலை எதிர்கொள்ள கூடுதலாக படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் படுக்கைகள்

இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறியதாவது:-
கொரோனா உறுதியானவர்கள் தற்போது வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கூடுதலாக 14 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மருத்துவமனை அருகே குழந்தைகளுக்காக 100 படுக்கை வசதிகள் தயாராக உள்ளது. தொற்று பாதித்து வந்தால் சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.