மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை வெளியேற்றியவரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
திருக்கோவிலூர் அருகே மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை வெளியேற்றியவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலூர்,
ஏரி
திருக்கோவிலூர் அருகே சடைகட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் சடைகட்டி மற்றும் புத்தகரம் ஆகிய கிராமங்களில் உள்ள 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த ஏரியில் உள்ள மீன்களை பிடிக்க சின்ராஜ் என்பவர் கடந்த ஆண்டு ஏலம் எடுத்திருந்தார். இந்த நிலையில் குத்தகைதாரர் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் மீனவர்களுடன் ஏரிக்கு சென்று மீன்களை பிடித்து வந்தார். அப்போது வலையில் மீன்கள் சிக்கவில்லை.
வாக்குவாதம்
இதனால் ஆத்திரமடைந்த மீன்வியாபாரி 2 டிராக்டர், பொக்லைன் எந்திரம் மற்றும் மோட்டார் மூலம் ஏரியில் இருந்து வடிகால் வாய்க்கால் மூலம் நீரை வெளியேற்றினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் எதற்காக நீரை வெளியேற்றுகிறீர்கள் என கேட்டு மீன்வியாபாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சி செயலாளருக்கு மிரட்டல்
இதுபற்றி தகவல் அறிந்து வந்து நீரை வெளியேற்றியதை கண்டித்த ஊராட்சி செயலாளரையும் பெண் என பாராமல் அந்த மீன்வியாபாரி ஆபாசமாக திட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஏரியில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story