குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்


குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்
x
தினத்தந்தி 10 Sep 2021 4:53 PM GMT (Updated: 2021-09-10T22:26:22+05:30)

குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்.

பந்தலூர்,

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-2) பாலவாடி லைன்ஸ் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன. 

மேலும் தொழிலாளர்களையும் துரத்தி வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விடிய விடிய குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதனால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தொழிலாளர்கள் பீதியடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் விரைந்து வந்து, காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர். ஆனால் அவை அங்கேயே சுற்றித்திரிந்தன. பின்னர் விடிந்ததும் நேற்று காலை 6.30 மணிக்கு மழவன்சேரம்பாடியில் இருந்து காவயல்வழியாக புஞ்சைகொல்லி செல்லும் சாலைக்கு வந்தது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பின்தொடர்ந்து வந்த வனத்துறையினர் கூச்சலிட்டு காட்டுயானைகளை விரட்டியடித்தனர். அப்போது அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்ததன. இதனால் அங்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பிறகு காட்டுயானைகள் கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-1) பத்துலைன்ஸ் குடியிருப்புக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டன. எனினும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் அபாயம் உள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.Next Story