வீடுகள், தொழில் நிறுவனங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு


வீடுகள், தொழில் நிறுவனங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 10 Sep 2021 5:19 PM GMT (Updated: 2021-09-10T22:49:47+05:30)

விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனி மாவட்டத்தில் வீடுகள், தொழில் நிறுவனங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

தேனி: 

விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலமாக செல்லவும் அரசு தடை விதித்தது. 

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தடையை மீறி வைக்க முயன்ற 8 விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து நேற்று மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களின் வீடுகள், தொழில் நிறுவனங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 297 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. பலரும் தங்களின் வீடுகளின் முன்பு 3 அடியில் இருந்து 7 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

இந்து முன்னணி
இந்து முன்னணி சார்பில் தேனி அல்லிநகரத்தில் உள்ள நிர்வாகி ஒருவரின் தொழிற்கூட வளாகத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் சிலையின் கண் திறக்கப்பட்டு, யாக பூஜைகள் நடந்தன. இதில், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன், பா.ஜ.க. நகர தலைவர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி போலீஸ் நிலையம் அருகே உள்ள நிர்வாகி ஒருவரின் ஒர்க்‌ஷாப்  வளாகத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தேனி பாரஸ்ட்ரோடு, அல்லிநகரம் உள்பட பல இடங்களிலும் பொதுமக்கள் சார்பில் வீடுகளின் முன்பு சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. 

இதேபோல் இந்து முன்னணி சார்பில் ஆண்டிப்பட்டி  சீனிவாச நகர், ராஜகோபாலன்பட்டி, மாயாண்டி பட்டி, கொத்தப்பட்டி, கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி, ஆதிபராசக்தி நகர், பூக்காரத் தெரு ஆகிய இடங்களில் சீனிவாச நகர், ராஜகோபாலன்பட்டி, மாயாண்டிபட்டி, கொத்தப்பட்டி, கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி, ஆதிபராசக்தி நகர், பூக்காரத் தெரு ஆகிய இடங்களில் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிப்பட்டனர்.   

சிலைகள் கரைப்பு
மாவட்டத்தில் நேற்று மாலையில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. அதில் தேனி அல்லிநகரத்தில் இருந்து இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலையை ஒரு சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக புறப்பட்டனர். பெத்தாட்சி விநாயகர் கோவில் அருகில் வந்த போது ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊர்வலமாக செல்ல அனுமதியில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 

இதனால் போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மோட்டார் சைக்கிள்களை முன்னே போகவிட்டு, சிறிய தூர இடைவெளியில் விநாயகர் சிலையை எடுத்துச் சென்றனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்று பாலத்துக்கு சற்று தொலைவில் வாகனங்களை நிறுத்திவிட்டு விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக நடந்து வந்தனர். பின்னர் ஆற்றில் சிலையை கரைத்தனர்.
தேனி அருகே தர்மாபுரி கிராமத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வீரபாண்டிக்கு எடுத்து வரப்பட்டு முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டன. 
அதுபோல், பெரியகுளம் வராகநதி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய இடங்களில் முல்லைப்பெரியாறு, போடியில் கொட்டக்குடி ஆறு போன்ற இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு பகுதியை சேர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் வாகனங்களில் சிலைகளை எடுத்து வந்து நீர்நிலைகளில் கரைத்தனர்.

சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களிலும் கூட்டம் கூடாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவட்டத்தில் சின்னமனூர் உள்பட சில இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை ஆகிய 2 நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. அதுபோல், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story