விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 10 Sept 2021 10:53 PM IST (Updated: 10 Sept 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை நடந்தது. தொற்று பரவலை கட்டுப்படுத்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் விநாயகர் கோவில்கள் நடை சாத்தப்பட்டு, உள்புறம் ஆகம விதிகளின்படி சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல், வெளியே நின்றபடி தரிசனம் செய்து சென்றனர். ஊட்டி இரட்டை பிள்ளையார் கோவில் மூடப்பட்டு இருந்தது. கோடப்பமந்து ஆனந்த விநாயகர் கோவிலில் சிறப்பு சந்தன அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

எளிமையாக...

ஊட்டி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள கற்பக விநாயகர் கோவில் உள்பட பிற விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.

கோத்தகிரி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், டானிங்டன் விநாயகர் கோவில், கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், கடைவீதி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

வளர்ப்பு யானைகள்

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளது. இதில் 4 யானைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடுகாணி பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்ட கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள தாவரவியல் பூங்காவில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 

இதில் அந்த 4 யானைகளும் கலந்துகொண்டன. தொடர்ந்து கரும்பு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. இதில் வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பந்தலூர் தாலுகாவில் சேரம்பாடி விநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. 

சிலைகள் பிரதிஷ்டை

கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நீலகிரியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய சிலைகளை வாங்கி வைத்து பூஜை செய்தனர். மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் வீடுகள் மற்றும் கோவில் வளாகங்களுக்குள் 290 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஊட்டியில் சிவசேனா கட்சி சார்பில் 29 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அங்கு பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.  

கோவில்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அந்தந்த இடங்களில் கரைக்கப்படுகிறது.


Next Story