1 லட்சம் பேருக்கு செலுத்த மெகா தடுப்பூசி முகாம்


1 லட்சம் பேருக்கு செலுத்த மெகா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 10 Sep 2021 5:43 PM GMT (Updated: 10 Sep 2021 5:43 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நாளை 1,150 இடங்களில் நடக்கிறது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் டி.மோகன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

மெகா தடுப்பூசி முகாம்

இதன் தொடர்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சிகளில் உள்ள 75 வார்டுகள், மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள், 688 கிராம ஊராட்சிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நூறுநாள் வேலை நடைபெறும் பணியிடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 1,150 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இம்முகாமிற்கான பணிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள், அனைத்துத்துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் என 10 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முகாமில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் இம்முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி இலக்கை எய்திட உதவியாக இருக்க வேண்டும்.

அச்ச உணர்வு வேண்டாம் 

நமது மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையான 20 லட்சத்து 69 ஆயிரத்து 842 பேரில் தற்போது வரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 17 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி நலமுடன் உள்ளனர். எனவே பொதுமக்கள் யாருக்கும் எந்தவித அச்ச உணர்வு வேண்டாம். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story