விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு


விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 10 Sep 2021 6:09 PM GMT (Updated: 10 Sep 2021 6:09 PM GMT)

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் ஆறுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

கரூர்
சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் நேற்று சிறப்பு வழிபட்டனர். இதையொட்டி கரூர் சின்ன ஆண்டாங்கோவில் ரோட்டில் உள்ள கற்பகவிநாயகர் கோவில், கரூர் மினி பஸ் நிலையம், தாலுகா அலுவலகம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர். 
அதேபோன்று கரூர் பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.
கரூர் ஈஸ்வரன் கோவில் அருகே இந்து முன்னணி சார்பில் தடையை மீறி 6 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைத்து அதற்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது.
குளித்தலை
குளித்தலை நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னனி மற்றும் பா.ஜ.க. சார்பில் அந்தந்த நிர்வாகிகளின் வீடுகளுக்கு முன்பு விநாயகர் சிலைகள் நேற்று வைக்கப்பட்டிருந்தன. இதன்படி குளித்தலை நகரப்பகுதிகளில் 15 இடத்திலும், குளித்தலை சுற்றியுள்ள கிராம பகுதிகளான ராஜேந்திரம், கணேசபுரம், பொய்யாமணி, பங்களாபுதூர், நங்கவரம் உள்ளிட்ட பகுதிகளில் என சுமார் 20 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன‌. 
குளித்தலை பஸ் நிலையம் அருகே உள்ள மங்கள விநாயகர் கோயில் முன்பு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஒன்று நேற்று வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஆச்சிசிவப்பிரகாசம், போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், வருவாய் ஆய்வாளர் துரைசாமி ஆகியோர் அனுமதியின்றி சிலை வைத்தது தொடர்பாக இந்து முன்னனியினரிடம் கேட்டனர். அப்போது அங்கு அதிகாரிகளிடம் இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் விநாயகர் கோவில் வெளியே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கோவில் வளாகத்தின் உள்ளே வைத்துக்கொள்ளும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இந்து முன்னணி சார்பில் கோவில் வெளியே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை கோவில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டது.
நொய்யல்-வேலாயுதம்பாளையம்
கரூர் மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நொய்யல், வேலாயுதம்பாளையம் உள்பட 21 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. இதில், 17 இடங்களில் விநாயகர் கோவில்களிலும், 4 இடங்களிலும் தனியாகவும் விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. 
நேற்று மாலை அந்தந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் வாகனம் மூலம் தனித்தனியாக எடுத்து சென்று தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் தனித்தனியாக கரைத்தனர். இதனால் வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
புகழிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய இந்து முன்னணியினர் முடிவு செய்திருந்தனர். இதை அறிந்த போலீசார் அப்பகுதி முழுவதும் இரும்பு தட்டிகள் வைத்து அடைந்திருந்ததனர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இந்துமுன்னணியினர் புகழிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி நேற்று காலை விநாயகர் சிலையை அங்கிருந்து எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர். 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நொய்யல் மற்றும் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. 
அரவக்குறிச்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரவக்குறிச்சி பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பள்ளப்பட்டி அருகே அண்ணா நகர், அரவக்குறிச்சி காமராஜ் நகர், பொன் நகர், ஜீவா நகர், சீத்தப்பட்டி காலனி, பாரதி நகர், கஞ்சமாரம்பட்டி, ராஜபுரம் (கிழக்கு), ராஜபுரம் (மேற்கு) ஆகிய 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பிறகு ஒவ்வொரு விநாயகர் சிலையாக தனித்தனி வாகனங்களில் ஏற்றப்பட்டு அரவக்குறிச்சி அருகே உள்ள அமராவதி ஆற்றில் கொண்டு சென்று கரைக்கப்பட்டது.
தோகைமலை
தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் கோவில்களில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூ, தேங்காய், வாைழப்பழம் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு இடங்கள்
இதேபோல் க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, நச்சலூர், வெள்ளியணை, தரகம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story