என்ஜினீயர் மனைவியிடம் நகை பறிக்க முயற்சி. பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்


என்ஜினீயர் மனைவியிடம்  நகை பறிக்க முயற்சி. பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்
x
தினத்தந்தி 10 Sep 2021 6:15 PM GMT (Updated: 10 Sep 2021 6:15 PM GMT)

திருப்பத்தூரில் தூய்மை பணியாளர்கள் என்று கூறி பட்டப்பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் நகைகளை பறிக்க முயன்ற ஒருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தூய்மை பணியாளர்கள் என்று கூறி பட்டப்பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் நகைகளை பறிக்க முயன்ற ஒருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

என்ஜினீயர் மனைவி

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் வசிப்பவர் சம்பத் (வயது 51). மின்சார வாரியத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன் தினம் காலை திருமணத்திற்காக பர்கூர் அருகே உள்ள கண்ணன்டஅள்ளிக்கு சென்றார். வீட்டில் அவரது மனைவி நந்தினி (47), மகள் ஷாலினி (19) ஆகியோர் மட்டும் இருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் சம்பத் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாகவும், வீட்டில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என நந்தினியிடம் அவர்கள் கூறினர். இதை நம்பிய நந்தினி 3 பேரையும் வீட்டுக்குள் அனுமதித்தார்.

நகை பறிக்க முயற்சி

 வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர்கள் முன்பக்க கதவை வேகமாக தாழிட்டு, கத்தியை காட்டி மிரட்டி நந்தினி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழட்டி கொடுக்கும்படி மிரட்டினர். இதனால் நந்தினி கூச்சலிட்டார். அப்போது, வீட்டுக்குள் இருந்த மகள் ஷாலினி ஓடி வந்தார். அவரையும் மர்ம நபர்கள் மிரட்டி அமைதியாக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்தனர். 

நந்தினி கூச்சலிட்டதை கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். இதைகண்ட மர்ம நபர்களில் ஒருவன் நந்தினியை தாக்கினான். அதில் அவர் நிலை குலைந்து கீழே சாய்ந்தார். உடனே, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களில் ஒருவனை பிடித்துக்கொண்டனர். 2 பேர் தப்பியோடிவிட்டனர். 
தர்ம அடி
பிடிபட்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், திருப்பத்தூர் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்பத்தூர் தாலுகா சிம்மணபுதூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (27) என்பதும், அவருடன் வந்தவர்கள் குனிச்சி கோவிந்தசாமி (33), அவருடைய மருமகன் திருப்பத்தூர் தாலுகா ஏரிக்கோடி திருமால் நகரைச் சேர்ந்த முருகன் (42)  என்பதும் தெரியவந்தது. 

இதைதொடர்ந்து, தாலுகா போலீசார் கோவிந்தசாமி, முருகன் ஆகியோரையும் கைது செய்தனர். கோவிந்தசாமி ஏற்கனவே திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதும், பெண்கள் தனியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் கொள்ளை அடிக்கலாம் என 2 பேரையும் அழைத்து வந்தததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story