பெங்களூரு ஆசிரமத்தில் பெண் சிறை வைப்பு: நித்யானந்தாவின் பெண் சீடர்கள் உள்பட 3 பேர் கைது


பெங்களூரு ஆசிரமத்தில் பெண் சிறை வைப்பு: நித்யானந்தாவின் பெண் சீடர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sep 2021 6:38 PM GMT (Updated: 2021-09-11T00:08:04+05:30)

பெங்களூரு ஆசிரமத்தில் பெண் சிறை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நித்யானந்தாவின் பெண் சீடர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரம்:
நித்யானந்தா பக்தை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அய்யம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் வசிப்பவர் ராமசாமி (வயது 62). விவசாயி. இவர் அதே பகுதியில் மளிகை கடையும் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அத்தாயி (52). இவர் பட்டணத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று வந்தார். இதனால் அவர் நித்யானந்தாவின் தீவிர பக்தை ஆனார்.
அத்தாயி கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு சென்று விட்டார். அங்கு தனது பெயரை மாரூபானந்தசாமி என்று மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை அழைத்து செல்ல கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் அத்தாயி தெரிவித்ததாகவும் தெரிகிறது.
இதனிடையே அத்தாயி வாங்கிய கடன் தொடர்பாக அவருடைய வீட்டை வங்கி நிர்வாகத்தினர் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையறிந்து அத்தாயி கடந்த 6-ந் தேதி சொந்த ஊருக்கு காரில் வந்தார். அவருடன் நித்யானந்தாவின் பெண் சீடர்களான அகிலா ராணி என்கிற மாநித்திய ஜோதிகானந்தசாமி (33), சத்யா என்கிற மாசர்வானந்தசாமி (41) மற்றும் ஆசிரமத்தில் பணியாற்றும் ஜெய கிருஷ்ணா (39) ஆகியோர் உடன் வந்தனர்.
பெண் சீடர்கள் விரட்டியடிப்பு
இந்தநிலையில் அத்தாயியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அய்யம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே அந்த காரை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அத்தாயியை இறக்கி விட்டு செல்லுமாறு கூறினர். இதனால் நித்யானந்தாவின் பெண் சீடர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அத்தாயியை மீட்டு வேறு காரில் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். மேலும் பெண் சீடர்கள் உள்பட 3 பேரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இந்தநிலையில் நித்யானந்தாவின் பெண் சீடர்களான அகிலா ராணி நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தங்களை தாக்கி அத்தாயியின் கணவர் ராமசாமி (62), மகன் பழனிசாமி (30), மருமகள் பேபி மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் அவரை கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தார். 
5 பேர் கைது
இதனிடையே அத்தாயியின் கணவர் ராமசாமி தனது மனைவியை பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் சிறை வைத்ததாகவும், அவரை வெளியே விடாமல் கொடுமைப்படுத்தியதாகவும், வங்கிக்கு கையெழுத்து போட வந்தபோது எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகவும் போலீசில் புகார் அளித்தார். இருதரப்பை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பில்ராஜ், செங்கோடன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 
இந்தநிலையில் நித்யானந்தாவின் பெண் சீடர்களான அகிலா ராணி, சத்யா மற்றும் ஜெயகிருஷ்ணா ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் நித்யானந்தா பெண் சீடர்கள் கொடுத்த புகாரின் பேரில் அத்தாயியின் கணவர் ராமசாமி, மகன் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story