பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு-விசுவ இந்து பரிஷத் அமைப்பினர், போலீசார் இடையே வாக்குவாதம்


பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு-விசுவ இந்து பரிஷத் அமைப்பினர், போலீசார் இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 10 Sep 2021 6:38 PM GMT (Updated: 2021-09-11T00:08:05+05:30)

பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்ய முயன்றதால் விசுவ இந்து பரிஷத் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பள்ளிபாளையம்:
வழிபாட்டுக்கு தடை
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது. மேலும் வீடுகளிலேயே கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும் அரசு அறிவுறுத்தியது.
இந்தநிலையில் நேற்று தடையை மீறி பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் 2 அடி உயர விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலையத்துறையினர், போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
வாக்குவாதம்
அவர்கள் தடையை மீறி சிலை வைத்து வழிபாடு செய்ய முயன்ற விசுவ இந்து பரிஷத் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தடை உத்தரவு அமலில் உள்ளதால் சிலையை வீட்டில் வைத்து வழிபட அறிவுறுத்தினர். இதற்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதனால் பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் சிலையை அங்கிருந்து எடுத்து சென்றனர். அப்போது அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Next Story