நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 10 Sep 2021 6:38 PM GMT (Updated: 2021-09-11T00:08:07+05:30)

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

நாமக்கல்:
முத்தங்கி அலங்காரம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தன. அதன்படி நாமக்கல் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன் உள்பட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து சாமி முத்தங்கி அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
செல்வ விநாயகர்
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட 23 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் தர்பார் விநாயகர், அர்த்தநாரீஸ்வரர் விநாயகர், கொரோனா வைரஸை அழிக்கும் விநாயகர் மற்றும் பாலமுருக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் சிலைகள் கோவிலுக்குள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோவிலுக்கு முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில், கணேசபுரம் விநாயகர் கோவில் உள்பட பல்வேறு விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி
பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த திங்கட்கிழமை காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 11 அடி உயர பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதிக்கு சிறப்பு யாகம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் லட்சார்ச்சனையும் நடைபெற்றது. புதன்கிழமை 108 வலம்புரி மற்றும் இடம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை பால், திருமஞ்சனத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
நேற்று காலை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதேபோல் கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி கரையோரம் உள்ள சத்திரத்து விநாயகர், பொத்தனூர் வல்லப கணபதி, சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகர், செட்டியார் தெருவில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
பள்ளிபாளையம், ராசிபுரம்
பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், சாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் தங்க கவசத்தில் அருள்பாலித்த விநாயகரை பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து தரிசனம் செய்தனர். இதேபோல் ராஜவீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில் சாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. காந்திபுரம் முதல் தெருவில் உள்ள விநாயகர் கோவில், காவேரி ஆறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில், அக்ரஹாரம் விநாயகர் கோவில், எஸ்.பி.பி. காலனியில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
ராசிபுரம் இ.பி. காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டதுடன் பொறி, லட்டு, கொழுக்கட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து வலம்புரி விநாயகர் பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதேபோல் பட்டணம் ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடத்தப்பட்து. கடைவீதியில் உள்ள இரட்டை விநாயர் கோவில், சிவானந்தசாலை சக்தி விநாயகர் கோவில் உள்பட ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதேபோல் வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வீடுகளில் கொண்டாட்டம்
இதனிடையே ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வழிபாட்டிற்காக பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்படுவது வழக்கம். 
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக சிலைகளை எடுத்து செல்லவும் தமிழக அரசு தடை விதித்து இருந்தது. அதன் காரணமாக 2-வது ஆண்டாக, பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படவில்லை.
இதனிடையே பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே சிறிய அளவிலான சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்கள் புத்தாடைகள் அணிந்து, பொறி, கொழுக்கட்டை உள்ளிட்ட பலகாரங்களை படைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.

Next Story