கார் ஓட்டியபோது திடீர் நெஞ்சு வலியால் விபத்து; அதிகாரி பலி


கார் ஓட்டியபோது திடீர் நெஞ்சு வலியால் விபத்து; அதிகாரி பலி
x
தினத்தந்தி 10 Sep 2021 7:42 PM GMT (Updated: 10 Sep 2021 7:42 PM GMT)

நாகர்கோவில்அருகே கார் ஓட்டியபோது திடீர் நெஞ்சு வலியால், காம்பவுண்டு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மத்திய தொல்லியல் துறை அதிகாரி பலியானார்.

மேலகிருஷ்ணன்புதூர், 
நாகர்கோவில்அருகே கார் ஓட்டியபோது திடீர் நெஞ்சு வலியால், காம்பவுண்டு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மத்திய தொல்லியல் துறை அதிகாரி பலியானார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அதிகாரி
நாகர்கோவில் அருகே உள்ள மேலச்செட்டி தெருவை சேர்ந்தவர் வள்ளிவேல் (வயது 39), மத்திய தொல்லியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி விஜயகுமாரி (34), இவர் தேனீ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு ஹரில் (12), ரகுல் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிைலயில் நேற்று மாலை வள்ளிவேலுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வள்ளிவேல் தனது காரில், மனைவி விஜயகுமாரியுடன் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். காரை வள்ளிவேல் ஓட்டி சென்றார். தெற்கு கண்ணன்குளம்  பகுதியில் சென்றபோது வள்ளிவேலுக்கு நெஞ்சுவலி அதிகமானதாக தெரிகிறது. இதனால் கார் கட்டுபாட்டை இழந்து அந்த பகுதியில் உள்ள ஒரு காம்பவுண்டு சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. 
பலி
இதில் காரில் இருந்த கணவன்-மனைவி இருவரும் காருக்குள் சிக்கி காயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் சிக்கி இருந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், வள்ளிவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். விஜயகுமாரிக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சுசீந்திரம் போலீசார் வள்ளிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
விசாரணை
இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் வள்ளிவேல் விபத்தில் இறந்தாரா? அல்லது நெஞ்சு வலியால் இறந்தாரா? என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 
மத்திய அரசு அதிகாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story