கடலூர் சில்வர் பீச்சுக்கு விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற பொதுமக்களை திருப்பி அனுப்பிய போலீசார்


கடலூர் சில்வர் பீச்சுக்கு விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற பொதுமக்களை திருப்பி அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 10 Sep 2021 8:04 PM GMT (Updated: 10 Sep 2021 8:04 PM GMT)

கடலூர் சில்வர் பீச்சுக்கு விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பியதால், அவர்கள் அருகில் உப்பனாற்றில் கரைத்து விட்டு சென்றனர்.

கடலூர், 

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட கூடாது. ஊர்வலமாக செல்லக்கூடாது. வீடுகளில் மட்டுமே சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும்.

வழிபட்ட விநாயகர் சிலைகளை தனிப்பட்ட நபராக சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கலாம் அல்லது அருகில் உள்ள கோவில்களில் வைத்து விடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடலூரில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் அந்த சிலைகளை ஒரு சிலர் அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்தனர்.

ஆற்றில் கரைத்தனர்

பெரும்பாலானோர் 3-வது நாள் கரைப்பது வழக்கம். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலைகள் அதிகம் நீர் நிலைகளில் கரைக்கப்படும். ஆனால் நேற்று சிலர் கடலூர் சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கொண்டு சென்றனர். அவர்களை சில்வர் பீச்சில் நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி, கடற்கரையில் சிலைகளை கரைக்கக்கூடாது. அருகில் உள்ள உப்பனாற்றில் கரைக்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பினர்.

அரசு உத்தரவிட்டும் சில்வர் பீச்சில் சிலைகளை கரைக்க போலீசார் தடை விதித்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் வேறுவழியின்றி ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள் வரும் வழியில் உள்ள உப்பனாறு பாலத்தில் வைத்து விநாயகர் சிலையை வழிபட்டு, ஆற்றில் கரைத்து விட்டு சென்றனர்.

தடை இல்லை

ஒரு சிலர் போலீசாருக்கு தெரியாமல் சிறிய பைகளில் விநாயகர் சிலைகளை வைத்து, கடற்கரைக்கு கொண்டு சென்று கரைத்து விட்டு சென்றதையும் பார்க்க முடிந்தது. சிலர் தேவனாம்பட்டினம் கிராமத்திற்குள் சென்று கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு சென்றனர்.
இது பற்றி கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரி சங்கரிடம் கேட்ட போது, வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை சில்வர் பீச்சில் கரைக்க தடையில்லை. கூட்டம் அதிகமாக கூடும் என்பதால் சிலரை போலீசார் திருப்பி அனுப்பி இருப்பார்கள். மற்றபடி தனிநபராக சென்று சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை கரைக்க எந்த தடையும் இல்லை என்றார்.

அதேபோல் வீடுகளில் உள்ள விநாயகர் சிலைகளை கடலூர் சில்வர் பீச்சில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தனிநபராக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வந்து சிலையை கரைத்து விட்டு செல்ல வேண்டும். கூட்டமாக வரக்கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்தார்.

Next Story