களையிழந்த விநாயகர் சதுர்த்தி விழா


களையிழந்த விநாயகர் சதுர்த்தி விழா
x
தினத்தந்தி 10 Sep 2021 8:15 PM GMT (Updated: 2021-09-11T01:45:23+05:30)

விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்தது.

அரியலூர்:

சிலைகள் வைக்க தடை
விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்தது.
இருப்பினும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் 2 அடி வரையிலான விநாயகர் சிலைகளை பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தி, பின்னர் 3-ம் நாள் தனி நபராக அந்த சிலையை எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம் அல்லது அருகே உள்ள கோவில்களின் முன்பு சிலைகளை வைத்து விட்டு சென்றால், அவற்றை இந்து சமய அறநிலையத்துறையினர் எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்தது. 
களையிழந்தது
அரியலூர் மாவட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து காணப்பட்டது. அரியலூரில் கோவில்களில் விநாயகருக்கு ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்றது. ஆனால் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் போன்றவை நடைபெறவில்லை. வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் வழிபாடு செய்யப்பட்ட கணக்க விநாயகர் கோவிலில் விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், பின்னர் பல்வேறு வகையான பூக்கள், அருகம்புல், வெற்றிலை உள்ளிட்டவற்றால் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திர சோழன் இளைஞர் அணி குழுவினர் செய்திருந்தனர்.
மீன்சுருட்டி, தா.பழூர்
மீன்சுருட்டி மற்றும் கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கிச்சென்று, வீட்டில் வைத்து பூஜை செய்து, விளாம்பழம் உள்ளிட்ட பழங்கள் மற்றும் கொழுக்கட்டை, பலகாரங்கள் ஆகியவற்றை படைத்து, வழிபட்டனர். பின்னர் அவற்றை உறவினர்களுக்கு வழங்கினர்.
தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விஸ்வநாதர் கோவில், அரசமரத்து விநாயகர் கோவில், செங்கழுநீர் பிள்ளையார் கோவில், வரசித்தி விநாயகர் கோவில், காரைக்குறிச்சி நவசக்தி விநாயகர் கோவில், கோடாலிகருப்பூர் விநாயகர் கோவில், மீனாட்சி சொக்கநாதர் கோவில், காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மார்க்கசகாயேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல்வேறு தனியார் இடங்களில் புதிதாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மாலையில் அரசு விதிகளுக்கு உட்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
உடையார்பாளையம், விக்கிரமங்கலம்
உடையார்பாளையம் பூசாரி தெருவில் உள்ள பஞ்சமுக விநாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பஞ்சமுக விநாயகருக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உடையார்பாளையம் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்ரீபுரந்தான், காசாங்கோட்டை சாத்தம்பாடி, குணமங்கலம் உள்ளிட்ட 12 இடங்களில் 2 முதல் 7 அடி வரை விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் வழிபட்டனர். பின்னர் அவை அங்குள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் நேற்று மாலையே கரைக்கப்பட்டன.

Next Story