25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகாசி தாலுகாவில் நாளை நடைபெறும் சிறப்பு முகாம்களில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கூறினார்.
சிவகாசி,
சிவகாசி தாலுகாவில் நாளை நடைபெறும் சிறப்பு முகாம்களில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கூறினார்.
ஆய்வு கூட்டம்
சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம்களை சிறப்பாக நடத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அசோகன் எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜ்குமார், சிவகாசி நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ், வட்டார மருத்துவ அலுவலர் வைரக்குமார், சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்களின் தலைவர்கள், யூனியன் கவுன்சிலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
100 சதவீதம்
ஆய்வு கூட்டத்தில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் பேசியதாவது:-
தமிழக அரசு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி போட மாநிலம் முழுவதும் மெகா சிறப்பு முகாம்களை நடத்த முயற்சி செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்துக்கு 1 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. அதில் 25 ஆயிரம் தடுப்பூசிகள் சிவகாசி தாலுகாவுக்கு வழங்கப்பட உள்ளது. சிவகாசி நகராட்சி, திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துக்களில் 127 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த பணியில் நீங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் 100 சதவீத தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தாலும், ஒரு பஞ்சாயத்தில் தகுதியானவர்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் அந்த நிறுவனத்துக்கும், அந்த பஞ்சாயத்து தலைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் சிவகாசி நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.
Related Tags :
Next Story