வீடுகள், கடைகள், கோவில்களுக்கு முன்பு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை


வீடுகள், கடைகள், கோவில்களுக்கு முன்பு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
x
தினத்தந்தி 10 Sep 2021 10:37 PM GMT (Updated: 2021-09-11T04:07:20+05:30)

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் வீடுகள், கடைகள், கோவில்களுக்கு முன்பு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

திருப்பூர்
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் வீடுகள், கடைகள், கோவில்களுக்கு முன்பு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அவரவர் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு தடை விதித்தும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று காலை அவரவர் வீடுகளில் 1 அடி, 2 அடி உயர விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர். கோவில்கள், கடைகள் முன்பும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் திறக்க அனுமதியில்லை. நேற்று விநாயகர் சதுர்த்தி என்ற போதிலும் கூட கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விநாயகர் கோவில்களுக்கு வந்த பக்தர்கள் கோவில் முன் சாமிதரிசனம் செய்து விட்டு புறப்பட்டனர்.
இந்து முன்னணி
இந்து முன்னணி, சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி, பா.ஜனதா கட்சியினர் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார்கள். இந்து முன்னணி சார்பில் திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் சந்திப்பு பகுதியில் இந்து முன்னணி அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சாமிகள் யாக பூஜைகள் நடத்தி வந்தார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேஷ்வரன், செந்தில்குமார், பா.ஜனதா மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் இந்து முன்னணி அமைப்பினர் தங்கள் வீடுகளுக்கு முன்பும், கடைகளுக்கு முன்பும், கோவில்களுக்கு முன்பும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சிங்கம், அன்ன வாகனத்தில் அமர்ந்த நிலையில் விநாயகர் சிலைகள் வைத்தும், கொரோனா வைரசை வதம் செய்யும் விநாயகர் சிலைகள் வைத்தும் வழிபட்டனர். திருப்பூர் மாநகர பகுதிகளில் 750 விநாயகர் சிலைகளும், மாவட்டம் முழுவதும் 1,500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
பா.ஜனதாவினர்
பா.ஜனதா மாவட்ட தலைவர் செந்தில்வேல் தனது வீட்டில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதுபோல் கட்சி நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். சிவசேனா கட்சி சார்பில் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் வீட்டுக்கு முன்பு விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது. இதுபோல் இந்து மக்கள் கட்சி சார்பில் பெருமாநல்லூர், பல்லடம் பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
பல பகுதிகளில் நேற்று மாலை விநாயகர் சிலைகளை தனித்தனியாக எடுத்துச்சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைத்தனர். வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை எடுத்து செல்வதற்கு வசதியாக காவல்துறை சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதுபோல் ஒவ்வொரு பகுதியிலும் கோவில்களுக்கு முன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறையினர் எடுத்து செல்வதற்கு வசதி செய்யப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாநகரில் போலீஸ் கமிஷனர் வனிதா தலைமையில் 800 போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமையில் 850 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

Next Story