ஒன்பதாறு சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு
நிபா வைரஸ் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக ஒன்பதாறு சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தளி
நிபா வைரஸ் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக ஒன்பதாறு சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஒன்பதாறு சோதனை சாவடி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் வழியாக உடுமலையில் இருந்து மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் செல்கின்ற வாகனங்களை சோதனை செய்வதற்காக ஒன்பதாறு மற்றும் சின்னாறு பகுதியில் வனத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
அதில் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் உடுமலை வனத்துறையினரும் சின்னார் சோதனைச்சாவடியில் அமராவதி வனத்துறையினரும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இரண்டு மாநில போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது. காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
கண்காணிப்பு தீவிரம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நிபா வைரஸ் பரவலும் உள்ளதாக தெரிகிறது.
இதனால் அங்கிருந்து வருகின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள-தமிழக எல்லையில் அமைந்துள்ள சின்னாறு மற்றும் ஒன்பதாறு சோதனைச்சாவடிகளில் வனத்துறையினர் மற்றும் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான சுகாதாரத்துறையினரும் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கண்காணிப்பும் தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் 3 நாட்களுக்குள் எடுத்த நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தெர்மல்ஸ்கேனர் கருவியின் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் உடலில் அதிகமாக வெப்பம் இருந்தால் வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அத்துடன் வாகனங்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் சுகாதாரத் துறையினர் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story