அம்மபள்ளி அணை திறப்பு; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


அம்மபள்ளி அணை திறப்பு; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 11 Sep 2021 9:33 AM GMT (Updated: 2021-09-11T15:03:11+05:30)

கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணை திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலங்கள் மூழ்கின.

பள்ளிப்பட்டு,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரம் மண்டலம் கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் அம்மபள்ளி அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. வேறு வழியில்லாமல் ஆந்திர மாநில அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட முடிவு செய்தனர்.

இதுகுறித்து தமிழக அதிகாரிகளுக்கு அவர்கள் நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தனர். நள்ளிரவில் அணையை திறந்து தண்ணீரை வெளியேற்றுவதாக அவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து தமிழக அதிகாரிகள் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், அவர்கள் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு நள்ளிரவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் யாரும் இரவு நேரத்தில் ஆற்றை கடக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

மேலும் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்கள் உள்ள கீழ்கால்பட்டடை, நெடியம், சாமந்தவாடா, சொரக்காய்பேட்டை போன்ற கிராமங்களையொட்டி செல்லும் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் வருவாய்த்துறையினரும் போலீசாரும் இரவு நேரத்தில் யாரும் ஆற்றில் இறங்காதவாறு காவல் காத்தனர்.

கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அணை திறக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று அதிகாலை 5 மணி வரை அணையில் இருந்து வெளியேறியது. அதன்பிறகு அணையை அதிகாரிகள் மூடினார்கள். நள்ளிரவு 10 மணியளவில் கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்த வெள்ளம் அதிகாலை 3 மணியளவில் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றின் வழியாக பாய்ந்து சென்றது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள அனைத்து தரைப்பாலங்களும் தண்ணீரில் மூழ்கின.

Next Story