சென்னை விமான நிலையம் அருகே தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி மோதி வியாபாரி சாவு


சென்னை விமான நிலையம் அருகே தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி மோதி வியாபாரி சாவு
x
தினத்தந்தி 11 Sep 2021 11:31 AM GMT (Updated: 2021-09-11T17:01:33+05:30)

சென்னை விமான நிலையம் அருகே தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி மோதி, சாலையோரம் நின்ற ஹெல்மெட் வியாபாரி உடல் நசுங்கி பலியானார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(வயது 62). இவர், சென்னை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையோரம் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று மதியம் குரோம்பேட்டையில் இருந்து கிண்டி நோக்கி பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி, சாலையோரம் உள்ள ரகுமானின் ஹெல்மெட் கடைக்குள் புகுந்து, அருகில் உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது.

அப்போது அப்துல் ரகுமான் மீது டேங்கர் லாரி மோதியதால் அவர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான அப்துல் ரகுமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த உடன் டேங்கர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி., சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story