கழிவுநீர் குழாயில் விரிசல்: ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் திடீர் பள்ளம்
ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
சென்னை,
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் நேற்று காலை வழக்கம்போல வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. இந்தநிலையில், காவேரி ஆஸ்பத்திரி அருகே உள்ள சிக்னல் பக்கத்தில் சாலையின் நடுவே திடீரென 3 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் சாலையில் அப்படியே தங்களது வாகனத்தை நிறுத்தினர்.
இதனால் சில நிமிடங்கள் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
தொடர்ந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்த போலீசார், தரையில் பதிக்கப்பட்டிருந்த கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டதை கண்டறிந்தனர்.
இதையடுத்து குடிநீர் வினியோகம் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அதிகாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் வாகன நெரிசல் நேரத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story