கட்டுமான பணியின்போது 24 வயது வாலிபர் இடுப்பு எலும்பு முறிந்து பலி


கட்டுமான பணியின்போது 24 வயது வாலிபர் இடுப்பு எலும்பு முறிந்து பலி
x
தினத்தந்தி 11 Sept 2021 6:25 PM IST (Updated: 11 Sept 2021 6:25 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணியின்போது 24 வயது வாலிபர் இடுப்பு எலும்பு முறிந்து இறந்தார். 2-வது மாடியில் இருந்து அவர் மீது தொழிலாளி தவறி விழுந்ததால் இந்த சோகம் நேர்ந்தது.

பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாபுலால் நகாக் (வயது 24), பக்டார் பெகரா(25) உள்பட வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், அங்கேயே தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிக்காக கட்டிடத்தின் ஒரத்தில் சாரம் அமைக்கப்பட்டு இருந்தது. சம்பவத்தன்று கட்டிடத்தின் 2-வது மாடியின் அருகே சாரத்தில் நின்றபடி பக்டார் பெகரா பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு நேராக கீழே நின்றபடி எம்சாண்ட் மணலை மேலே அனுப்புவதற்கான பணியில் பாபுலால் நகாக் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது திடீரென 2-வது மாடியில் நின்று கொண்டிருந்த பக்டார் பெகரா நிலைதடுமாறி கீழே நின்று கொண்டிருந்த பாபுலால் நகாக் மீது தவறி விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் பாபுலால் நகாக்கிற்கு இடுப்பு எலும்பு முறிந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாபுலால் நகாக் பரிதாபமாக உயிரிழந்தார். பக்டார் பெகரா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story