குளத்தில் மூழ்கி குழந்தைகள் பலி: குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தந்தை தற்கொலை
ஆம்பூர் அருகே குழந்தைகள் தங்கள் கண்முன்னே குளத்தில் மூழ்கி இறந்ததால் துக்கம்தாளாத தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஜோலார்பேட்டை
ஆம்பூர் அருகே குழந்தைகள் தங்கள் கண்முன்னே குளத்தில் மூழ்கி இறந்ததால் துக்கம்தாளாத தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தாய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
டிரைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 39). டிரைவர். இவரது மனைவி மீனாட்சி (29). இவர்களுக்கு ஜஸ்வந்த் (8) என்ற மகனும், ஹர்பிரீத்தா (6) என்ற மகளும் இருந்தனர். அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஜஸ்வந்த் 4-ம் வகுப்பும், ஹரிபிரீத்தா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கடாம்பூர் கிராமத்தில் உள்ள மீனாட்சியின் வீட்டில் லோகேஸ்வரன் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். மீனாட்சி ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
குளத்தில் மூழ்கி குழந்தைகள் பலி
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கணவன்- மனைவி இருவரும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே உள்ள கைலாசகிரி மலைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள சுப்பிரமணிய சாமி கோவில் குளத்தில் சிறுவர்கள் இருவரும் மீன் பிடித்துள்ளனர். அப்போது இருவரும் கால் தவறி குளத்தில் விழுந்து இறந்துவிட்டனர்.
குழந்தைகள் தங்கள் கண்முன்னே குளத்தில் மூழ்கியதை காப்பாற்ற முடியாமல் போனதால் லோகேஸ்வரன், மீனாட்சி ஆகியோர் வாழ்க்கையில் வெறுப்படைந்து இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
விஷம் குடித்து தற்கொலை
நேற்று காலை ஆம்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் இருவரும் குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து முதலில் லோகேஸ்வரன் குடித்துள்ளார். பின்னர் தனது மனைவி மீனாட்சிக்கு கொடுத்தார். அவர் குடிக்க முயன்றபோது அதை லோகேஸ்வரன் திடீரென தட்டிவிட்டுள்ளார். இதனால் மீனாட்சி சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை கூப்பிட்டார்.
அவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்சில் இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஸ்வரன் இறந்துவிட்டார். மீனாட்சி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக உறவினர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குழந்தைகள் இறந்ததால் பெற்றோர் தற்கொலைக்கு முயன்று, தந்தையும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story